சென்னை மெட்ரோ முதல் ஓட்டுநர் இல்லாத ரயில் வருவதில் தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய இந்த ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டி தயாரிக்கும் பணி ஆகஸ்ட் மாதம் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டது.
ஆனால், இது செப்டம்பர் இறுதியில் தான் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இந்த ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கப்பட உள்ளது.
அதேவேளையில் பூந்தமல்லி – போரூர் வழித்தடம் வரும் மார்ச் மாதம் தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில் பெட்டி வருவதில் ஏற்படும் காலதாமதம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
ரயில் எஞ்சின் வந்தவுடன் அதன் தர பரிசோதனைக்குப் பிறகு யார்டில் அமைக்கப்பட இருக்கும் 800 மீட்டர் தொலைவு கொண்ட ரயில் பாதையில் முதலில் இயக்கப்படும்.
இதன் பரிசோதனை வெற்றிபெற்றவுடன் பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் ஒரு சில மாதங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்படும் அதன் பிறகே இது பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.