சென்னை: திமுக அரசு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்கு தொழிற்சங்கத் தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியிருந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட உள்ள மின்சார பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் அரசு டெண்டர் கோரியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பாஜக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து அரசியல் செய்து வரும் திமுக, தற்போது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர் பணிகள் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்ட நிலையில், மேலும் பல்வேறு அரசு பணிகளுக்கான பணிகளை தனியார் மூலமும், காண்டிராக்ட் மூலமும் மேற்கொண்டு வருகிறது.

1991ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்குச் சந்தையைத் திறந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியை மத்திய பாஜக அரசும் தனியார் மயத்தை ஊக்குவித்து வருகின்றன. இதன் காரணமாக, அபரிமிதமான முதலீடுகள் உள்ளே வருகின்றன. விவசாயம், உற்பத்தித் துறை மட்டுமே என்று இருந்த சந்தையில் பல புதிய துறைகள் உருவாகி வருகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் இயக்கப்பட இருக்கும் மின்சார பேருந்துகளை தனியாரிடம் தாரை வார்க்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதுபோல வெளியூர்களுக்கு செல்ல தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதன்மூலம் பெரு நஷ்டத்தை சம்பாதித்த தமிழ்நாடு அரசு, தற்போது முழு நிர்வாகத்தையே தனியாரிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினந்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். மேலும் மகளிருக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்புச் சலுகை மற்றும் என மக்களுக்கு பயன் தரக்கூடிய பல திட்டங்களையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே பல அரசு பேருந்து நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது நிலையில், தற்போது முதன்முறை யாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை தனியாரிடம் தாரை வார்க்க திமுகஅரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
சென்னையில் , சென்னை மாநகராட்சி மற்றும் அரசு இணைந்து 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் Procurement, Supply, Operation and Maintenance of 600 Low Floor Electric Buses and Development of Allied Electric and Civil Infrastructure on Gross Cost Contracting (GCC) in Phase 2 for MTC (Chennai) Ltd., இயக்குவதற்கு உரிமம் வழங்குவதற்காக தகுதி வாய்ந்த கீழ்க்காணும் ஆவண அத்தாட்சி சமர்ப்பிக்கும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படு கின்றன.
ஒப்பந்தப்புள்ளி விபரம்: ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் 11.02.2025, ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள் மற்றும் நேரம் 10.03.2025 பகல் 12.00 மணி, ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் மற்றும் நேரம் 03.04.2025 பகல் 16.00 வரை, ஒப்பந்தப்புள்ளி திறப்பு நாள் மற்றும் நேரம் 03.04.2025 பிற்பகல் 16.30 மணிக்கு, முன் வைப்புத் தொகை ரூ.3,00,00,000/-, ஒப்பந்தபடிவம் திறப்புக்கு முன் நடக்கும் கூட்டம் 20.02.2025 15.00 மணி.
ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் https://tntenders.gov.in/, https://mtcbus.tn.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பார்வையிட்டுக் கொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app யில் மட்டுமே பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளில் மாற்றம் ஏதேனும் இருப்பின் அவ்விவரம் மேற்படி இணையதள முகவரியில் வெளியிடப்படும். ஒப்பந்தப் புள்ளிதாரர்கள் மேற்படி இணையதள முகவரியில் விபரத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்ப படிவங்களை / ஒப்பந்தப்புள்ளிகளை எவ்வித காரணமும் விளக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளவோ / நிராகரிக்கவோ மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.