சென்னை: அடையாறு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பூமிக்கு அடியில் துளையிட்டு வந்த காவேரி இயந்திரம், அடையாற்றை கடந்து அடையாறு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமையுடன் அறிவித்து உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் மற்றும் 3வது வழித்தடத்திற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதில் வழித்தடம் 3க்குகான பணி அடையாறு பகுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது. காவேரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடற்கரை, மயிலாப்பூர், மந்தை வெளி வழியாக பணிகளை முடித்துக்கொண்டு, அடையாறு ஆற்றின் கீழே சென்று பணியாற்றிக்கொண்டிருந்தது. இதை வெற்றிகரமாக முடித்து தற்போது அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில் , சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும்.
சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு பூமி அழுத்த சமநிலை (Earth Pressure Balancing – EPB) சுரங்கம் தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை மற்றும் மேற்பகுதி மணல்போன்ற கலப்பு புவியியல் நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. மேலும், அடையாறு ஆற்றின் சிலபகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் சில பெட்ரோல் பங்குகள், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, ஆந்திர சபா மருத்துவமனை, துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் அடையார் பாலம் கீழேயும் கடந்து சென்றது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் நவம்பர் 2024-க்குள் அடையாறு நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தில் நாதமுனி கொளத்தூர் வரையிலான சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் மாதவரம் சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) ஐந்தாவது வழித்தடம் ஒன்றாகும் இந்தத் தடத்தில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், ஆறு சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் தூண்கள் அமைத்து உயர்மட்டப் பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
சுரங்கப்பாதையைப் பொறுத்தவரை, கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது இந்தப் பகுதி பாறைகளால் நிறைந்தது என அடையாளம் காணப்பட்டு உள்ளதால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணியில் மிகவும் சவாலான பகுதியாக இது இருக்கும் என்று தெரியவந்துள்ளது இங்கு சுரங்கப் பாதை அமைக்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது, இங்குள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், இந்த சுரங்கப்பாதை பணி முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் நாதமுனி ஆகிய ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது.
இந்த வழித்தடத்தில் இடம்பெறும் வில்லிவாக்கம், நாதமுனி உள்ளிட்ட சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இங்கு சுரங்கப்பாதை பணி வரும் டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இதுதவிர, சுரங்கப்பாதையில் இருந்து உயர்மட்டப் பாதைக்கு மாறும் விதமாக, சாய்தளப் பாதை அமைக்கும் பணி வில்லிவாக்கத்தில் இருந்து பாடிக்கு செல்லும் வழியில் பாடி மேம்பாலம் அருகே அமைக்கப்படுகிறது. 175 மீட்டர் அளவுக்கு சாய்தளப் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.