சென்னை: சென்னையில் நாளை (ஜனவரி 5ந்தேதி)  அதிகாலை  மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் சிறப்பு ரயில்கள்  இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களின்  பேராதரவை பெற்றுள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி, துரித சேவை வழங்கி வருகிறது. அவ்வப்போது போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது.  இதனால், மெட்ரோ ரயில் சேவையை பெரும்பாலான  பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் விரும்பி பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில்,  நாளை சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவித்து உள்ளது.

மெட்ரோ ரயில் சேவை தான். இந்த மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்கு குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து வருகிறது.​சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம்  வெளியிடப்பட்டுள்ள  செய்தி குறிப்பில், “சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.​மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.