சென்னை மெட்ரோ ரயில் – எம்ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்து MRTSஐ சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்துக்கு மாற்றுவது குறித்த கோரிக்கையை சமர்ப்பித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிடப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் – எம்ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயிடம் ரயில்வே வாரியம் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அதிகாரிகள் வாரியத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பேற்றுள்ள CUMTA, 2024 ஆம் ஆண்டில் ரயில்வே வாரியத்திடம் முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது, ஆனால் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கிறது. இந்த திட்டத்தின்படி, MRTS ஆண்டுக்கு ரூ.104 கோடி இயக்கச் செலவை ஏற்படுத்துகிறது, ஆனால் சுமார் ரூ.50 கோடி மட்டுமே வருவாய் ஈட்டுகிறது.

திட்டத்தில் நீடித்த தாமதங்கள் குறித்து பயணிகள் விரக்தியை வெளிப்படுத்தினர், பலர் MRTS உடன் ஒப்பிடும்போது சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதில் உள்ள எளிமை மற்றும் வசதியை எடுத்துக்காட்டினர்.

MRTS ரயில் நிலையங்களில் பெரும்பாலான இடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதையும் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒப்பிடும் போது MRTS ரயில் நிலையங்களில் தூய்மை இல்லை என்று சுட்டிக்காட்டிய பயணிகள் இந்த இணைப்புத் திட்டம் இதற்கான தீர்வைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.