சென்னை

சென்னையில் தரமணி மாநகராட்சி பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையில் தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  அப்போது முகாமில் நடைபெறும் ஆய்வகம், மனநல ஆலோசனை, எலும்பு மற்றும் இயன்முறை பரிசோதனை, கண் பரிசோதனை முதலியவற்றை ஆய்வு செய்தனர்.

அதற்குப் பிரகுப் பின் செய்தியாளர்களிடம் மேயர் பிரியா ராஜன்,  “ஏற்கனவே முதல்வர் மு க ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது மூன்றாவது முறையாக தரமணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முகாமில் பல்வேறு விதமான பரிசோதனைகளும் மருத்துவச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. ஆகவே மக்கள் முன்வந்து இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் மேயர், 15 மண்டலத்திலும் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாம் மேயராக பதவி ஏற்று ஒரு வாரக் காலம்தான் நிறைவடைந்துள்ளதால் வருங்காலங்களில் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறி உள்ளார்.