சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும், 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் காலையில் நடந்த விசாரணையின் போது தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டுவது ஏன்?
கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் தேர்வை நடத்தலாம். ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்குள் அரசு தெரிவிக்கவேண்டும். தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
அதன்பின்னர் மீண்டும் மதியம் விசாரணை நடைபெற்றது. உயர்நீதி மன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் தமது வாதத்தில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய காலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அக்டோபர்,நவம்பரில் கொரோனா தாக்கம் அதிகமடையும்.
மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும்.
தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்தல், மாணவர்களுக்கு கவசம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படும். பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் என்று வாதிட்டார்.
இதையடுத்து 10ம் வகுப்பு தேர்வு வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.