சென்னை: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜூலை 11ந்தேதி அன்று அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்து, பூட்டை உடைத்து உள்ளே சென்றது வன்முறையானது. இந்த விவகாரத்தில் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கமல், அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று கடந்த 15ம் தேதி நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போத,  காவல்துறை தரப்பில், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் எனக்கூறி அதனை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேற்கொண்டு எந்த மோதலும் இல்லை என இரு தரப்பில் உத்தரவாதம் அளிக்கவில்லை. தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால், மேலும் பிரச்சனை ஏற்படலாம். அ.தி.மு.க. அலுவலக மோதலில் பொதுச்சொத்து சேதம் தொடர்பாக, இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோவை பார்த்த நீதிபதி, கலவரம் நடக்கும்போது காவல்துறை வேடிக்கை பார்த்ததை சுட்டிக்காட்டியதுடன், ஹெல்மெட் அணிந்துகொண்டு கலவரம் செய்ததை கண்டு சிரித்தார்.

இந்த வழக்கில்  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வரும் திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று (20/7/2022) மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.