சென்னை
வழக்கு ஒன்றின் தீர்ப்பில் ஒரு பெண், நிதி அமைச்சர், ஆடிட்டர், சமையல் கலைஞர், அன்பான தாய், அருமையான மனைவி என பன்முகம் கொண்டவள் என சென்னை உயர்நீதிமன்றம் புகழ்ந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்தவர் மாலதி. அவருடைய கணவர் சம்பத்குமார். அவர்களுக்கு இரு குழந்தைகள். ஒருநாள், அறுந்து விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மாலதி மின்சாரம் பாய்ந்து மரணம் அடைந்தார். அவர் கணவர் மின்வாரியத்தின் மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, மாலதியின் வருமான தோராயமாக மாதம் ரூ 3000 எனக் கணக்கிட்டும் ரூ 3 லட்சம் நஷ்டஈடு அளிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மின்வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அப்பீல் மனுவில் மாலதி இல்லத்தரசி, எனவே அவருக்கு வருமானம் கிடையாது எனவும், அவர் குடும்பத்தினருக்கு எந்தவித நஷ்டமும் இல்லை எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் மின்வாரியத்தின் அப்பீல் மனுவை நிராகரித்தது. தீர்ப்பில் ஒரு பெண் அன்பான தாய், மற்றும் அருமையான மனவி மட்டும் அல்ல, நிதி அமைச்சர், சமையல் கலைஞர், குடும்பத்தின் வரவு செலவை கவனிக்கும் ஆடிட்டர் என பன்முகம் கொண்டவள். ஒரு பெண்ணின் இழப்பு என்பது மேலே குறிப்பிட்ட பணிகளுக்காக மட்டும் அல்ல, அவருடைய கணவருக்கும், குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஈடுகட்ட முடியாத இழப்பும் சேர்ந்ததே ஆகும். அந்த இழப்பை எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடு கட்ட முடியாது” எனக்கூறி மேலும் மின்கம்பி அறுந்தது முழுக்க முழுக்க வாரியத்தின் கவனக்குறைவே என்றும், தனிமனிதனுக்கு உள்ள பொறுப்புக்களை விட வாரியத்துக்கு பொறுப்பு அதிகம் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும் எனவும் மின்வாரியத்துக்கு அறிவுரை கூறி உள்ளது.