சென்னை: கோவையில் அவினாசி சாலை 4 வழி மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை 10.10 கி.மீ. தூரத்திற்கு ரூபாய் 1,600 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை எதிர்த்து, சசி அட்வர்டைசிங் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில், நெடுஞ்சாலை சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல், மக்களிடம் கருத்துக் கேட்காமல், நோட்டீஸ் வழங்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரூபாய் 1,600 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக தமிழக அரசு, நில ஆர்ஜித அதிகாரி, கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஜூன் 22ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையையும் ஒத்தி வைத்தனர்.