சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றதும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. ர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, பலருக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது.
அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவரது மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக, இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை் நியமிப்பது தவறானது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த 9ந்தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டதுடன், மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
அதன்படி வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.