சென்னை: திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுஆய்வு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று தொடங்க உள்ளது.
ஏற்கனவே திமுக அமைச்சர்களான கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கின் மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், பொன்முடி மீதான வழக்கின் மறு விசாரணைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பை வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்க உள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி, திமுக துணை பொதுச் செயலாளராகவும், அரசின் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 1996 – 2001 கால திமுக ஆட்சியின்போத போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த கால கட்டத்தில் பதவியை முறைகேடாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து குவித்ததாக பொன்முடிக்கு எதிராக 2002 அதிமுக ஆட்சியில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கின் விசாரணை திடீரென வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், 2022ஆம் ஆண்டுக்கு வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுவித்து அதிரடி காட்டியது. இது பேசும்பொருளாக மாறியது.
மேலும், இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. இதுகுறித்து அறிந்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மோசமான முறையில் நடைபெற்றுள்ளதாக கூறியதுடன், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல செயல்படுகிறது என கடுமையாக விமர்சித்தார். மேலும், இவ்வழக்கை சூமோட்டாவாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறு ஆய்வுக்கு எடுத்தார்.
இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார் அமைச்சர் பொன்முடி. ஆனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் நீதித் துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கை எதிர்கொள்ள பொன்முடிக்கு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது பொன்முடி தரப்பு, வழக்கு விசாரணையை வேலூருக்கு மாற்ற நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவித்தது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக ஆட்சியில் என் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது எனவும், தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்ததால் என்னை குற்றவாளியாக சித்தரிக்கிறார்கள் எனவும் வாதிடப்பட்டது.
அதே சமயம் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மறுஆய்வு வழக்கின் இறுதி விசாரணை இன்னும் துவங்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் வாதங்கள் முன்வைக்காமலேயே விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அதே சமயம் மற்ற அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்குகள் மீது நீதிபதி தீர்ப்பளித்துவிட்டார்.
கடைசியாக பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்றது. பொன்முடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, பொன்முடி தரப்பில் இறுதிக்கட்ட வாதங்களை முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட உள்ளது.