சென்னை:   ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பதாக பேசிய கனல் கண்ணன் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்த நிலையில், அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கனல்கண்ணன் தரப்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்று வழக்கை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

முன்னதாக,  இந்து முன்னணி அமைப்பு  ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம்’ என்ற தொடர் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இந்தப் பிரசார பயணம் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை மதுரவாயலில்  நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்துகொண்ட இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன்  பேசும்போது, “ஸ்ரீ ரங்கநாதனைக்  தினமும் ஒரு லட்சம் பேர் சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலை. அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்,” என்று பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  அந்தப் புகாரின் அடிப்படையில் 153, 505/1b (கலகம் செய்யத் தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை  ரத்து செய்யக்கோரி  கனல்கண்ணன் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்று வழக்கை உயர்நீதி மன்றம்  வழக்கை ரத்து செய்துள்ளது.