சென்னை:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம்  ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த  2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் எகளுக்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக கூறியது.

இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு தேர்வை ரத்து செய்தது சரி என தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து,  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்த உத்தரவிடப்பட்டது.

ஒரே வழக்கில் உயர்நீதிமன்றமும், உயர்நீதிமன்ற கிளையும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புகளை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரணை செய்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த  தமிழக அரசின் தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும்,  முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டனர்.