சென்னை
தேர்வு எதுவும் நடத்தாமல் அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவிக்க சில பல்கலைக்கழகங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஒரு சில பல்கலைக்கழகங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமோ தேர்வுகள் எதுவும் நடத்தவில்லை. மாறாக அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரியர் தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எவ்வாறு சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்டன எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். அத்துடன் அரசாணை மூலம் தேர்வுகளை ரத்து செய்ய எவ்வாறு முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் ”ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ தேர்வு எதுவும் நடைபெறவில்லை. எனவே தேர்வு நடத்தாமல் பலகலைக்கழகங்கள் முடிவுகளை அறிவிக்கக் கூடாது. ஆகவே இந்த தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.