சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திரைப்பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
‘டி3’ என்னும் நடிகர் பிரஜன் நடித்த திரைப்படத்தை பாலாஜி என்பவர் இயக்க, மனோஜ் என்பவர் தயாரித்து இருந்தார். மனோஜ் படத்தை தயாரிக்க சாமுவேல் காட்சன் என்பவரிடம் ரூ.4 கோடி கடன் பெற்று இருந்தபோது படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தமும் செய்தார்.
ஆயினும் ஒப்பந்தத்தை மீறிப் படத்தை மனோஜ் வெளியிட்டார். சாமுவேல் காட்சன் இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘டி3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடத் தடை விதித்தது. மேலும் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறிப் படத்தை ஓ.டி.டி. தளத்தில் மனோஜ் வெளியிட்டார். எனவே இயக்குநர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமுவேல் காட்சன் தாக்கல் செய்தார்.
வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்க சிவம் ஆஜராகி வாதிட்டார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராகும்படி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டார். இயக்குநர் பாலாஜி நேரில் ஆஜரானார். பாலாஜியிடம் விசாரணை நடத்திய நீதிபதி, பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்து, உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.