சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடநாடு வழக்கில் சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என வினா எழுப்பி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த  மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மனுவில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையில்அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , கொடநாடு கொலை , கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். உயர்நீதிமன்ற நீதிபதி, தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லாததால் அவரை சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது என வினா எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.