சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
கடந்த வாரம் அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் சிக்கி உள்ளார்.
கடந்த 2001ம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. இந்த காலக்கட்டத்தில், வீட்டு வசதி மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2006ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. உயர்நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு பச்சைக்கொடி காட்டி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதால், செப்டம்பர் மாதம் வழக்கை தள்ளிவைப்பதாகவும், அதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.