சென்னை
ஆலயத் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் தாலுகா பழைய மரக்காணம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,
‘எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி வளத்தி காவல்துறையிடம் மனு கொடுத்தோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி எங்களது கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து விட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்”
எனக் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு,
”ஏற்கனவே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து விட்டது. எனவே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, ஆலயத் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டத்துக்கு உட்பட்டு வளத்தி காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்”
என்று உத்தரவிட்டுள்ளார்.