சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், மையம் உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும்,  வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச மையம் அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு வள்ளலார் சபை உறுப்பினர்கள், உள்பட அந்த பகுதி பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து,  வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் கட்டுங்கள் என எதிர்க்கட்சிகளும் மாநில அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், திமுக அரசு, தனது அறிவிப்பில் இருந்த பின்வாங்க மறுத்து, சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான பணிகளை  தொடங்கியது. அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு,  ஏப்ரல் 8ந்தேதி பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த  அந்த பகுதியயான பார்வதிபுரம் கிராம மக்கள் கட்டுமானத்துக்க்காக வந்தவர்களை விரட்டியடித்துவிட்டு, கட்டுமாணத்துக்காக  தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 161 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள்  10 அம்ச கோரிக்கையை வெளியிட்டனர். அதில், ”சத்திய ஞானசபை பெருவெளியில் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், வள்ளல் பெருமானாரின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் மூதாதையர்களான பார்வதிபுர கிராம மக்கள் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது,

பெருவெளி பெருவெளியாகத்தான் இருக்க வேண்டும்,

1867-ம் ஆண்டு முதல் 157 வருட காலமாக  பெருவெளியாக இருந்த இடத்தை கட்டிடங்கள் கட்டி சிறுவெளியாக ஆக்காதீர்கள் 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் கட்டுமான வேலைகளை தொடராமல் உடனடியாக நிறுத்த வேண்டும்

. எங்கள் பார்வதிபுரம் மூதாதையர்களிடம் தானமாக பெறப்பட்ட 31 காணி (106 ஏக்கர்) நிலத்தை மறு அளவீடு செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

திருவருட்பா உரைநடை பகுதியில் இருந்து எங்கள் முன்னோர்கள் தானமாக நிலம் கொடுத்தவர்களின் பெயர் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது இது போன்ற செயல்கள் எங்களது உரிமையை பறிக்கும் செயலாகும்.

நீக்கப்பட்ட பக்கத்தை தினசரி நாளிதழில் வள்ளலார் தெய்வ நிலையம் நிர்வாகம் சார்பாக வெளியிட வேண்டும்,

வள்ளல் பெருமானார் நிறுவிய ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ மட்டுமே தலைமைச் சங்கமாக செயல்பட வேண்டும்.

வள்ளலாரின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வடலூர் தலைமை சங்கத்தை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பாக எங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவின் மீது இது நாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மற்றும் எந்த ஒரு நிர்வாக அதிகாரிகளும் எங்களை அழைத்து பேசவில்லை” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து தேர்தல் காரணமாக, இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்காலிகமாக ஒத்திவைத்தது.  ஆனால், தேர்தல் முடிந்ததும் மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்கியது. இது அந்த பகுதி மக்களிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில்,  நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க இடைக்கால தடை விதித்துள்ளதுடன், அந்த மையம்  உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து,  இந்த வழக்குகளை கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.