சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பார்கள் குறித்த டெண்டரை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பு குறித்து புதிய டெண்டர் அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது. டாஸ்மாக் நிறுவனம் இந்த புதிய டெண்டரில் பார்கள் அமைக்க நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் உள்ளிட்ட நிபன்ந்தனைகள் விதித்தது.
இந்த புதிய அறிவிப்பை எதிர்த்துப் பார் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இன்று இந்த வழக்குகள் நீதிபதி கி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் இந்த விண்ணப்பம் வாங்க விடாமல் யாரையும் தடுக்கவில்லை. இதுவரை 13000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள், ”கொரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால் எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேடும். பார்களுக்கு முதலில் தடையில்லா சான்றிதழ் தேவையில்லை எனத் தெரிவித்த டாஸ்மாக் நிர்வாகம் இப்போது அதைக் கோருகிறது. இந்த டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்டு புதிய டெண்டர்களை 8 மாவட்டங்களில் கோரக் கூடாது என உத்தரவிடவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைக்க விடுத்த டெண்டரை எதிர்த்து அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும் ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டதால் பழைய டெண்டர்களை நீட்டிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்படுகிறது” என உத்தரவு இட்டுள்ளது.