சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.
அரசு ஆணையத்தின் அறிக்கையை ஏற்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. ,மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட உத்தரவிட்டது. துப்பாக்கிச் சூடு குறித்த சி.பி.ஐ. விசாரணை சரியில்லை என்றும் இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை. ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது. விசாரணை முடிவு பற்றி எந்த கவலையும் இல்லாமல் விசாரணை நடத்தினால் அறிக்கை நியாயமானதாக இருக்காது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, தூத்துக்குடி சம்பவத்தில் உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆதாரங்களை விசாரிக்க அரசு செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைப்பது எப்படி நியாயம்..? அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.