சென்னை: அரசு பள்ளியில் நடைபெற்ற மோட்டிவேசன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், “என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. உன்னை சும்மா விடமாட்டேன்” -என பள்ளி கல்வித்துறை ஆவேசப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசமாக கூறினார்.
அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மோடிவேஷனல் ஸ்பீச் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மோடிவேஷனல் ஸ்பீச் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் ஆன்மீக தேடல் பற்றி வகுப்பு சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
அப்போது, மாணவர்கள் , ‘தன்னை உணர்தல்’ என்கிற ரீதியில் பேசியதுடன், நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என மாணவிகள் மத்தியில் பேசியுள்ளார். மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வந்து மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். இதனால் ஆசிரியருக்கும், மகாவிஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோவையும் மகா விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இதற்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக அரசுப் பள்ளியில் இவர் இது போன்ற நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழக அரசின், பள்ளிக் கல்வித்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
“என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்” , அதனால் மகாவிஷ்ணுவை அவ்வளவு சீக்கிரத்தில சும்மா விடமாட்டேன் என எச்சரித்துள்ளார்.
அத்துடன், மூட நம்பிக்கைகள் குறித்து பேசியவரை அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு தெரிவித்தார். பிற்போக்கு பேச்சை எதிர்த்து தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது.” “அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக்கூடியது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.”
“பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அறிவு சார்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டும். ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச புரிதல் வேண்டும். இதை வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் சொல்கிறேன்.”
“இந்த சம்பவத்தில் நான்கு நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதல்-அமைச்சருக்கும், பள்ளிகல்வித்துறைக்கும் உள்ளது,” என்று தெரிவித்தார்.
மேலும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விளக்கம் உத்தரவிட்டுள்ளார். 17 (A) விதியின் கீழ் பள்ளியில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மாகவிஷ்னு யார்:
குருஜி மகா விஷ்ணு என அழைக்கப்படும் இவர், பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் மகாவிஷ்ணு சிறு வயதில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக செயல்பட்டுள்ளார். தற்போது திருப்பூரை மையமாகக் கொண்டு பரம்பொருள் ஃபவுண்டேஷனை நடத்தி வருகிறார். முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மதுரை மகா என்ற பெயரில் கலக்கியுள்ளார். அவரது பேச்சாற்றல் பலரையும் கவர்ந்த நிலையில் தற்போது வளர்ந்து தனது பாதையை மாற்றியுள்ளார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம், ஆன்ம தேடலுக்கு வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறார். அவரவர் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தீர்வும் தருவதாக கூறி வருகிறார்.
இவரது அறக்கட்டளை மூலம், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளித்தல், பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், ஆகியவற்றை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் சென்று ஆன்மீக வகுப்பு எடுத்து வரும் மகா விஷ்ணு, இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று ஸ்ட்ரெஸ் ரிலீஃப் வகுப்புகளை எடுத்து வருகிறார். மேலும் குருவின் கருணை என்ற பெயரில் ருத்ராட்சம், கருங்காலி, நினைத்ததை நிறைவேற்றும் விநாயகர் சிலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
தற்போது, அரசுப் பள்ளிகளில் ஆன்மீக தேடல் சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி இருப்பதால் பிரச்சனை பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட பலரை சந்தித்தும் பேசியிருக்கிறார். அதைத்தொடர்ந்தே அவரை பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தலைம ஆசிரியர்கள் அழைத்து வந்துள்ளனர்.
குருஜி மகா விஷ்ணு என அழைக்கப்படும் இவர், தமிழக அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே, தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய “திருவருட்பா”வைச் சேர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார் மகா விஷ்ணு.
அதேபோல இதே கோரிக்கையுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி்.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோரையும் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதன்பிறகே மகாவிஷ்ணு ஞானப்பாதைக்கு வழிகாட்டுகிறேன் எனக் கூறி அரசுப் பள்ளிகளில் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், தற்போத திடீரென அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.