சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ. 738 கோடியில் மழைநீர் வடிகால் திட்டதிற்காக சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.400 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக அரசும், சென்னை மாநகராட்சியும் கூறி வந்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல்வாரத்தில் பெய்த கனமழைக்கு சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், ஓஎம்ஆர், ஈசிஆர், பெருங்குடி மற்றும் பள்ளிக்கரணை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் திமுக அரசுமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் ரூ. 738 கோடியில் 122 கிலோ மீட்டருருக்கு மழைநீர் வடிகால் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ள திட்டமிட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.
முக்கியமாக துரைப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற ஓஎம்ஆர் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைக்கும் வகையில், 122 கிலோமீட்டருக்கு மேல் வடிகால் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட தெருக்களும் அடங்கும். மூன்று கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற உள்ளது. மேலும், இது ஜெர்மன் KfW வங்கியின் நிதியுதவியுடன் கோவளம் பேசின் திட்டத்தின் மூன்றாம் கட்டம் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டம்மேலும் OMR மற்றும் ECR ஆகிய இரண்டு கட்டங்களில் ஏற்கனவே 600 கோடியில் மழைநீர் வடிகால் திட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும, ஈசிஆர்-ஓஎம்ஆர் மற்றும் ரேடியல் சாலை மடிப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை கோவளத்துடன் இணைக்கப்பட்ட 283.18 கிமீ நீள வடிகால் வலையமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்ந திட்டத்தின்படி, செம்மஞ்சேரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாயுடன் நேரடி வடிகால் இணைக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை, பெருங்குடி, ஆலந்தூர், தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளிலிருந்து வரும் கால்வாய்களின் முக்கிய பகுதிகள் ஓஎம்ஆர் மற்றும் ரேடியல் ரோடு வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு கொண்டு செல்லப்படும்.
செம்மஞ்சேரியில் இருந்து வரும் வடிகால் சதுப்பு நிலம் மற்றும் ஒக்கியம் மடுவின் சுமையை குறைக்கும் வகையில் பி கால்வாயுடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளது. இதனுடன் அருகே உள்ள ஸ்ரீசாய் நகர், திருவள்ளுவர் நகர், செந்தில் நகர், நீலாங்கரை இணைப்பு சாலை, பெத்தேல் நகர், நூக்காம்பாளையம் போன்ற பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் கூறும்போது, கட் அண்ட் கவர் மழைநீர் வடிகால்கள் ஒரு மீட்டர் ஆழமும் அகலமும் கொண்டவை, மேலும் 20 சென்டிமீட்டர் தண்ணீரை மட்டுமே கொண்டு செல்ல முடியும். அவை பேரழிவுகளுக்காக வடிவமைக்கப்படவில்லை. நாம் பெரிய காலநிலை பேரழிவுகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என்பதால், இழந்த ஓடைகளை மீட்டெடுக்கவும், ஏரிகளுடன் இணைப்பை மீட்டெடுக்கவும் மேக்ரோ வடிகால் அமைக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வடியும் முன் டிஎல்எப் ஐடி பகுதிகளுக்கு செல்லும் மதுரப்பாக்கம் ஓடை, ஒட்டியம்பாக்கம் ஓடை, வெங்கடமங்கலம் ஓடை போன்ற ஓடைகள் காணாமல் போய்விட்டன என்பதையும் சுட்டிக்காட்டினார்.