சென்னை: கஞ்சா ரெய்டு நடந்த காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம்  கல்லூரியில், ரெய்டில் சிக்கிய  மாணவர்  விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்  கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த மாணவர்  தான்தங்கியிருந்த  அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில்  உள்ள எஸ்ஆர்எம். கல்லூரி விடுதிகளில் சில தினங்களுக்கு முன் போலீசார்  அதிரடி ரெய்டுநடத்தினர். கல்லுரி மாணவர்களிடையே போதை பொருள் நடமாட்டம் உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார், அங்குள்ள சுமார் 500 விடுதிகளில், அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளிலும், வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கஞ்சா, போதை சாக்லெட், போதை ஊசிகள், போதை மாத்திரைகள் என பல வகைகளில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகக் காவல்துறையினருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அதிகாலையில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த சோதனையில் மாணவ, மாணவிகளின் அறைகளிலிருந்து அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில், போதை பவுடர்கள், பாங், கஞ்சா புகைப்பதற்கான உபரகணங்களான குக்கா  ஸ்மோக்கிங் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதை வைத்திருந்த பெண் மாணவகிள  உள்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதில், 21 பேர்மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஒரு பெண், மூன்று வடமாநிலத்தவர், 11 கல்லூரி மாணவர் என 14 பேரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி மற்றும் 10 மாணவர்கள் உட்பட 11 பேரை நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்தார். தாபா கடை உரிமையாளர்களான வட மாநிலத்தை சேர்ந்த 3 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த சீனிவாச நிகில் (20) தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் கல்லூரி அருகே உள்ள  அபெளட் வேலி என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நிலையில், கஞ்சா ரெய்டின்போது, அவரது அறையில் இருந்தும்   கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிகிலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவரின் பெற்றோரை அழைத்து வர வற்புறுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிகில்,  அடுக்கு மாடி குடியிருப்பின் மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.