சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பல சுடுகாடுகள் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், குற்றவாளிகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. இதையடுத்து, மாநகராட்சி மேயர் பிரியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மயானங்களில் சிசிடிவி காமிரா உள்பட சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன வசதிகளுடன் அழகுபடுத்தி பராமரித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், (மத்தியம்),. எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு), சிவகுரு ஐஏஎஸ்
(வடக்கு) , தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், மாநகர நல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மயான பூமிகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி உபயோகப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கை குளித்து ஆலோசிக்கப்பட்டது. .மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அனுபவத்தின் படி, பல மயானங்கள் சுத்தமும் சுகாதாரமும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கான காரணங்களை மேயர் அதிகாரியிடம் கேட்டரிந்துள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மேயர் பிரியா, மயானத்தை சுற்றியும் மயானத்திற்கு உள்ளேவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட வேண்டும் என்று கூறியதுடன், 24 மணி நேரமும் பணி சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் இரவு நேரத்தில் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மயானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். இலவச மயான சேவை பெறுவதை உறுதி செய்யும் வகையில் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க ஏதுவாக மயானங்களில் இலவச புகார் எண் காட்சிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்