சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் சாக்கடையை இணைத்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கும் கடந்தகால உத்தரவை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது சென்னை மாநகராட்சி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது மழையை அடுத்து, புதிதாக கட்டப்பட்ட பல மழைநீர் வடிகால் கால்வாய்களிலும் குப்பைக்கூளங்கள் அடைத்திருந்தது பல இடங்களில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இத்தகைய வடிகால் கால்வாய்களில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் விபரங்களைக் கண்டறிய முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய செயல்களுக்கு அபராதம் விதிக்கும் விதிமுறைகள் மாநகராட்சி சட்டத்தில் ஏற்கனவே இருந்தாலும் அதை இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். மேலும், அந்த சட்டவிரோத இணைப்புகள் கண்டறியப்பட்டவுடன் பிரச்சினையை சரிசெய்வது குறித்து முடிவுசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையின் அடையார், கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் ஒருநாளைக்கு 170 மில்லியன் லிட்டர்கள் சாக்கடை நீர் சட்டவிரோதமாக கலப்பதால் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டிலிருந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி 8000க்கும் மேற்பட்ட சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை முடியது சென்னை மாநகராட்சி. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக நடவடிக்கையில் இறங்கவுள்ளது மாநகராட்சி என்று கூறப்படுகிறது.