சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,72,415 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 30,131 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். இதுவரை 12,840 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலும் மாநில தலைநகர் சென்னையே முதலிடத்தில் உள்ளது.நேற்று மட்டும் 1,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,59,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,43,395 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 4,292 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் 11,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து,கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழகஅரசு மீண்டும் கடுமையாக்கி உள்ளது., இந்த நிலையில், சென்னையில் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாவிட்டால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
‘இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்க, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன்படி, பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவும், குறைந்தபட்ச 6 அடி தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகள், அலுவலகம், வணிக வளாகங்களின் முகப்புவாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்,
பணியிடங்களை கிருமி நாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை 2 முறைக்கு மேல் மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் .
ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு 500 ரூபாயும்,
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாயும்,
தனிநபர் இடைவெளியை மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறும், முடிதிருத்தகங்கள், ஜிம், வணிக வளாகங்களுக்கு 5000ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதோரிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் நாள்தோறும் தலா ஒன்றரை லட்சம் ரூபாயும், கோடம்பாக்கம் மண்டலத்தில் நாள்தோறும் ஒன்றேகால் லட்சம் ரூபாயும், அண்ணா நகர் மண்டலத்தில் 1 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.