அடையாறு: பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்டு வந்த திருமண மண்டபத்துக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக, இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (25ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழுநேர ஊரடங்கால், சென்னை மாநகர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி உறைந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாததால், நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்தாலும் சிலர் விதிமீறி வெளியே சென்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தினர். விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு, எச்சரித்து அனுப்பப்பட்டனர். சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்து சென்ற, வேன் ஓட்டுனருக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில், அடையாறு மண்டலம், 175வது வார்டு, காந்தி நகர், 2வது பிரதான சாலையில், அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், அரசு விதித்த கட்டுப்பாடுகள் எதையும் கடைப்பிடிக்கவில்லை என, மண்டல வருவாய்த் துறைக்கு புகார் சென்றது.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வருவாய்த் துறை அதிகாரி தலைமையில் சென்ற அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வெளியேறியதும், மண்டபத்தை பூட்டி, ‘சீல்’ வைத்தனர்.பின், மண்டப நிர்வாகத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.