சென்னை: சென்னையில் செயல்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரித்து வந்தாலும், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றர். மேலும் ஆசிரியர்களும் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், பொதுமக்களின்தேவையை கருதியும், மாணவர்களின் நலன் கருதி அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதுடன், தமிழ் மீடியம், ஆங்கி மீடியம் என இரு வகையாக கல்வியும் போதிக்கப்பட்டு வருகிறது. இதனால், தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என மாநகராட்சி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும், 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மொத்தமுள்ள 417 மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்தாண்டு புதிதாக 6000 மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு, 16,490 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாகவும், அதிகபட்சமாக எல்.கே.ஜி, யு.கே.ஜி.யில் 7,500 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என மாநகராட்சி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு! மாநகராட்சி தகவல்