சென்னை:  சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை 1லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவத்தால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வி போதிப்பதாக கூறி மாணவர்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி வருகின்றனர். அன்றாய உணவுக்கே கஷ்டப்படும் சாமானியர்கள், பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து விலக்கி, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டு,  மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாநகராட்சியின் கீழ் சென்னை தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள்  உள்ளன. இந்த பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டமுடியாமல் பலர் அங்கிருந்து  வெளியேறி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

நடப்பு  2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. சேர்க்கை தொடங்கி ஒரு மாதமே ஆகும் நிலயில், இதுவரை 1லட்சத்து ஆயிரத்து 757 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதில், தனியார், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறிய சுமார் 19 ஆயிரத்து 38 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2020-21ம் கலவி ஆண்டில் , 1 வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை,  சேர்ந்த மொத்த மாணவர்கள் 27 ஆயிரத்து 311 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.