சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.


சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில்  சுமார் 1,420 பேருந்து நிறுத்தங்கள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த பேருந்து நிறுத்தங்களில் சுமார் 700 நிறுத்தங்கள் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நிறுத்தங்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் பல நிறுத்தங்கள் உடைந்த கூரைகள், மோசமான இருக்கைகள் மற்றும் அதிகளவிலான சுவரொட்டிகளுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.  இதில் சென்னை மாநகராட்சி கட்டிப்பாட்டில் உள்ள 720 நிறுத்தங்களில் 149 நிறுத்தங்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.பெரும்பாலான நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்பட்டன. மது போதையில் இருப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் மாறியிருந்தது. மேலும் பாகுபாடின்றி அரசியல் கட்சிகிளின் கட்சி  நோட்டீஸ்ம் மற்றும் கண்ணீர் அஞ்சலி, திருமண அறிவிப்பு போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.

இவ்வாறு இருக்கும்  பேருந்து நிலையங்களை மேம்பபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  முன்னதாக, ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஆக.21-ம் தேதி தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.   1373 பேருந்து நிறுத்த நிழற்குடைகள் தூய்மைப்படுத்தப்பட்டன/

இந்த  நிலையில் மாநகராட்சியின் 1 முதல் 8 வரையிலான மண்டலங்கள் மற்றும் 10, 11 ஆகிய மண்டலங்களில் 132 நிகழ்குடைகள் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. அதை சீரமைக்க ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சுமார் ரூ.1 கோடியில் அவற்றை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,    சாந்தோம், பட்டினம்பாக்கம் சந்திப்பு, டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் 3டி வடிவிலான நவீன முறையில் நிழற்குடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த 3D பேருந்து நிறுத்தங்களை விரைவாக நிறுவ முடிவதுடன் தேவைப்படும் போதும் வேறு இடத்திற்கு மாற்றவும் முடியும் என்பதால் மாநகராட்சி சார்பில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தத்தில் போஸ்டர்கள் ஏதுவும் ஒட்ட முடியாது.

அடுத்தக்கட்டமாக 12 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள 81 பேருந்து நிறுத்தங்கள் நவீனமயமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, மாமன்ற கூட்டத்தில் சென்னை முழுவதும்,  8.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் 15 மண்டலங்களிலும் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முன்மொழிந்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கோரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் இல்லாத 62 பகுதிகளில் புதிய பேருந்து நிழற்குடைகள் தேவை என்பது தெரியவந்துள்ளது. கவுன்சில் வியாழக்கிழமை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல் கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு மிகவும் பாழடைந்து காணப்படும் பேருந்து நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.