சென்னை

சென்னை மாநகராட்சி மதிப்பீடு செய்த தொகையைக் காட்டிலும் 15% குறைவாக விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரரின் 14 விலைப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கட்டுமான வேலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் போது அரசின் மதிப்பீட்டுத் தொகையைக் காட்டிலும் 25% குறைவான மற்றும் 25% அதிகமான தொகை உள்ள புள்ளிகள் நிராகரிக்கப்படுவது வழக்கமாகும்.அத்துடன் இது சம்பந்தமாக எவ்வித பேரமும் நடத்தப்பட மாட்டாது என்பதும் மாநகராட்சி விதிகளில் ஒன்றாகும்.

சென்ற மார்ச் மாதம் மாதவரம் மண்டல அதிகாரி ஆறு இடங்களில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தப் புள்ளிகள் கோரி இருந்தார்.   இந்த பணிக்கு ரூ.26.5 லட்ச மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது இதற்காக மூன்றாம் நிலை ஒப்பந்ததாரர்கள் ஆறு பேர் 6% லிருந்து 15% வரை மதிப்பீட்டை விட குறைவாக விலைப்புள்ளி அளித்திருந்தனர்.   இதில் எம் ரவி என்பவர் மூன்று இடங்களுக்கு 15% குறைவாக விலைப்புள்ளி அளித்திருந்தார்.

ஆனால் அவருக்கு ஒப்பந்தம் அளிக்க மாநகராட்சி அதிகரி  மறுத்துள்ளார்.  ரவி குறைவாக விலைப்புள்ளி அளித்ததற்கான காரணம் ஒப்புக் கொள்ளும்படி இல்லை எனவும் இவ்வளவு குறைவான விலையில் கட்டுமானம் அமைத்தால் அந்த கட்டுமானம் தரமாக இருக்காது எனவும் இரு கடிதங்களைச் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி அனுப்பி உள்ளார்.

ஜூன் மாதம் அதே மண்டல அதிகாரி 8 சுற்றுச் சுவர் கட்ட விலைப்புள்ளி கோரி இருந்தார்.  அதற்கு ஒப்பந்ததாரர் ரவி நான்கு இடங்களுக்குக் குறைவான விலை கோரி இருந்தார்.  அவரை மீண்டும் இவ்வாறு குறைந்த விலை அளித்தது எப்படி என அதிகாரி கேட்டுள்ளார். அதன்பிறகு தற்போது இதே காரணம் காட்டி அவரது விலைப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் இதே அதிகாரி மதிப்பீட்டைக் காட்டிலும் அதிக விலை கோரியோருக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாக ரவி தெரிவித்துள்ளார்.  இது குறித்து மண்டல அதிகாரி தேவேந்திரன் அவ்வளவு குறைவான தொகையில் கட்டிடம் கட்டினால் அது தரமானதாக இருக்காது என அதே காரணத்தைத் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அளிக்கப்பட்ட புகாரைக் கவனிப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.