சென்னை

சென்னை மாநகராட்சி சென்னை நகர சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க திட்டமிட்டுள்ளது.

நேற்று முன்தினம் தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. எப்போதும் கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். என்னும் நிலையில் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

தமிழகத்தில் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் அடிப்பதால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், கம்பங் கூழ், மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை பருகி வருகின்றனர். பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் மக்கள் தாகத்தை தணித்து வருகின்றன.

வாகன ஓட்டிகள் இந்த சுட்டெரிக்கும் வெயிலில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை பல்வேறு மாநகராட்சிகள் தொடங்கி உள்ளன.

கோடை வெயில் சுட்டெரிப்பதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.