சென்னை: தெருக்களிலும், சாலையோரங்களிலும் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளை அள்ளிச்செல்ல வரும் குப்பை லாரிகளில், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இரவு நேரத்தில் குப்பை அள்ளும் பணியை தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்க சென்னையில் அனைத்து தூய்மை பணிகளும் இரவு நேரங்களிலேயே முடிக்கப்படும் என கூறியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறன. சென்னையில் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறன. தற்போது தூய்மை பணி மேற்கொள்ளும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 23 டிப்பர் லாரிகள் மற்றும் 1,786 தூய்மை பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சாலைகளில் தூய்மை பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும் போதும், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அகற்றப்படும்போதும் பேருந்து மற்றும் உட்புற சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த திட்டம் முக்கிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. ஆனால், இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இரவு கும்பை அள்ளும் பணி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.