சென்னை
சென்னையில் கொரோனா விதிமீறலுக்கான அபராதத்துக்கு தினசரி ரூ.10 லட்சம் என சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை என அஞ்சப்படும் தற்போதைய கால கட்டத்தில் தினசரி பாதிப்பு 1000க்கும் அதிகமாகி வருகிறது. இதையொட்டி கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைச் சென்னை மாநகராட்சி கடுமையாக்கி உள்ளது.
மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.200 அபராதம் எனவும் பொது இடங்களில் எச்சில் துப்புவோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோருக்கு ரூ.500 அபராதம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்துடன் முடி திருத்தகம், ஜிம், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு விதிகளை மீறினால் ரூ.5,000 எனவும் 2 முறைக்கு மேல் விதிகளை மீறினால் சீல் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப் போல் கோடம்பாக்கம் மண்டலத்தில் நாள்தோறும் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், அண்ணாநகர் மண்டலத்தில் 1 லட்சம் ரூபாயும் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.