சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் ‘பஞ்சாமிர்தம்’ போன்று கலவையாகவும், சுவையாகவும் வெளியாகி உள்ளது. முன்னாள், இந்நாள் கட்சியினர் மட்டுமின்றி படித்தவர்கள், பாமரர்கள் என பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்பு உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை நேற்று இரவு வரை அறிவித்து வந்தன. திமுக சார்பில் நேற்று பிற்பகல் வரை 11 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 12வது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், தலைநகர் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியானது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை தவிர்த்து, திமுக மட்டும் 174 வார்டுகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 16 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுபோல மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 இடங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.
திமுக வெளியிட்டுள்ள பட்டியலில் திமுகவைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். மேலும் பல தொழில் வல்லுநர்கள், கடந்த கால தலைவர் களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றும் பல பிரபலமான புதிய முகங்களும் இடம் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த, சுகாதாரத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி யில் அனைத்து சமுதாயத்தினருக்கும், அனைத்துத் துறையினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கவும், பொதுமக்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.
சென்னை திமுக வேட்பாளர்கள் குறித்து கூறிய வடசென்னை மாவட்டச் செயலாளரான அமைச்சர் சேகர்பாபு, இந்த பட்டியலில் புதிய முகங்கள் மற்றும் பழைய பெயர்கள் இடம்பெற்றுள்ளது. கட்சியும் அனைத்து தரப்பினர் கொண்ட கலவையை கட்சி விரும்புவதாக கூறியவர், “அம்பத்தூரில் வார்டு 81-ஐச் சேர்ந்த டாக்டர் சாந்தகுமாரி போன்ற மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்களின் முழு குடும்பமும் ஒரே தொழிலில் இருந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
வேட்பாளர்கள் பட்டியல்குறித்து கூறிய, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் “உள்ளாட்சி அளவில் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஆட்சியை உறுதி செய்வதே கட்சியின் யோசனை. அதற்கான வேட்பாளர் பட்டியலே இது. “இது ஒரு சிறந்த கலவையாகும் என்று பெருமிதத்துடன் கூறினார்.
வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கியமானவர்கள் விவரம்..
கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பிரச்சினை பண்ணி, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான திமுக சீட்டை தவறவிட்ட முன்னாள் கவுன்சிலர் கே.தனசேகர் முக்கியமானவர். அவருக்கு வார்டு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய உதவியாளருமான சித்ராசு வார்டு 110க்கு போட்டியிடுகிறார்.
ஏழு முறை எம்.எல்.ஏ.வாக இருந்து, இறுதியில் அதிமுகவில் இணைந்த, முன்னாள் அமைச்சருமான பருத்தி இளம்வழுதியின் மகனும், கட்சியின் இளைஞர் அணி உறுப்பினருமான பருதி இளம்சுருதி, வார்டு 99ல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். ஐஏஎஸ் சிவகாமி அதிமுக கூட்டணி சார்பில் போட்யிடுகிறார்.
திருவொற்றியூரைச் சேர்ந்த தனியரசு (வார்டு 10), கடந்த மாதம் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பொறியாளரை தாக்கி சர்ச்சைக்குள்ளான திமுக எம்எல்ஏ கேபி சங்கரின் சகோதரர் கேபி சொக்கலிங்கம் வார்டு 5ல் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராயபுரத்தில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அக்கட்சியின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளரும் வலுவான கள அமைப்பாளருமான இளைய அருணாவுக்கு இந்த தேர்தலில் திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.
மதுரவாயல் வார்டு 150ல், எம்எல்ஏ கே கணபதியின் மனைவி ஹேமலதா போட்டியிடுகிறார்.
திரு.வி.க.நகர் தொகுதியில் இரண்டு முறை பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த செங்கை சிவத்தின் மகள் ஆர்.பிரியா வார்டு 74ல் போட்டியிடுகிறார்.
முதன்முறையாக, பாஜக பிரச்சாரத்தை எதிர்கொள்ள ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயின் ஒருவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் பஞ்சாமிர்தம் போன்று அனைத்து கலவையுடன் காணப்படுகிறது.