சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிங்காரச்சென்னையின் பல பகுதிகளில் கலையிழந்து காணப்படுகின்றன. மேலும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் , மக்கள் தொகை பெருக்கம், வாகன நெரிசல் போன்றவற்றுடன் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் சாலையோர ஆக்கிரமிப்பு போன்றவைகளே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் குறித்த நேரத்துக்கு குறித்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில், மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளை அகலப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர் லட்டிஸ் பாலம் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாறு லட்டிஸ் பிரிட்ஜ் சாலையின் அகலம் 30.5 மீட்டராகவும், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் நியூ ஆவடி சாலை 18 மீட்டராகவும் அகலப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் மாநகராட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி சில பகுதிகளில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் , சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 4 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்ற சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் சாலையின் மேற்பரப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.