சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், சொத்துவரி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்திய நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதிமுக கவுன்சிலர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநகராட்சிக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பட்ஜெட் கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில், சொத்து வரி உயர்வு குறித்து பேச மேயர் பிரியா அனுமதி தராததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.