சென்னை: சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜனவரியில், இந்த புதிய முறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கட்டணம் வசூலிக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள், விடுதிகள், மருத்துவமனைகள் என இடத்திற்கேற்ப குறைந்தது ரூ. 10 முதல் ரூ. 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி இருந்ததால், திட்டத்தை நிறுத்திவைப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது