சென்னை

நிவர் புயல் தொடர்பான உதவிகளுக்குத் தேவையான தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  நிவர் புயல் கரையைக் கடக்கும்  போது மணிக்கு 130 முதல் 140 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மிகவும் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால், திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாகக் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  புயல் காரணமாகச் சென்னை நகரில் விடாது கன மழை பெய்து வருகிறது.  பல இடங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி வருகிறது.

இதையொட்டி சென்னை மாநகராட்சி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.   தேங்கி வரும் மழை நீரை அகற்றத் தூர்வாரும் இயந்திரங்கள், நீர் இறக்கும் வாகனங்கள் 176 நிவாரண மையங்கள், 108 படகுகள், மருத்துவக்குழுக்கள் ஆகியவற்றை ,மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.   மேலும் 24 மணி நேரக் கட்டுப்பாடு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புயல் நிவாரணம் வேண்டுவோர் இந்த கட்டுப்பாட்டு அறையை 044-25384530 மற்றும் 044-25384540 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  இதைத் தவிர கழிவுநீர் கால்வாய் அடைப்பு, கழிவு நீர் தேக்கம் உள்ளிட்டவற்றுக்கு 04445674567 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.