சென்னை: சென்னையில் உள்ள 3,644 சாலைகளை சீரமைக்க ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் வடகிழக்கு பருவமழையின்போது சேதமடைந்தன. அந்த சாலைகள் இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, சென்னையில் உள்ள சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் சென்னையில் உள்ள 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மாநகராட்சியில் நடைபெற்று மேம்பாட்டு பணிகள், மற்றும் பெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மழையால் சாலைகளில் ஏற்பட்ட சேதம் என பல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சென்னையில் 387 கி.மீ தொலைவிற்கு 471 பேருந்து தட சாலைகள், 5270 கி.மீ தொலைவிற்கு உட்புறச் சாலைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த பருவமழையின் போது சேதமடைந்த சாலைகளை, மூன்று தொகுப்புகளாக சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 857 சாலைகள் ரூ. 63.2 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் திட்டத்தின் கீழ் 1197 சாலைகள் 149 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பேரிடர் சிறப்பு திட்டத்தின் கீழ் 1590 சாலைகள் 180 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 292,2 கோடி (180+149+63.2=392.2) ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
3 தொகுப்புகளின் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் டெண்டர் முடிவு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே போடப்பட்ட சாலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அளவு, அதன் ஆழத்தை கணக்கிட்டு புதிதாகப் போடப்படும் சாலை, அதில் பயன்படுத்தப்படும் தார்க்கலவையின் தரம், சாலையின் நடுவிலிருந்து ஓரத்துக்கான சாய்வுஅளவு ஆகியவற்றை ஆய்வு செய்து, சாலைகளை உரிய அளவுகளின் படியும், சரியான தரத்திலும் அமைப்பதை உறுதி செய்யுமாறும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.