சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மீண்டும் நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் சுமார் 25 அர்ச்சர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி நீராடினர்.
ஒரே சமமான இடத்தில் அனைவரும் வட்டமாக நின்று இடுப்பளவு தண்ணீரில் சுவாமி விக்கிரகத்துடன் மூன்றுமுறை மூழ்கி எழுந்தனர்.
இதில் ஒருவரின் கால் சேற்றில் சிக்கியதால் அவரால் வெளியேற முடியாமல் நீரில் மூழ்கினார் இதனை பார்த்த மேலும் நான்கு அர்ச்சகர்கள் அவரைக் காப்பாற்ற சென்ற நிலையில் அவர்களும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
சூர்யா (24), ராகவ் (22), ராகவன் (18), லோகேஸ்வரன் (23), வணேஷ் (20) ஆகிய 5 இளைஞர்கள் ஒரே நேரத்தில் இறந்ததை அடுத்து நங்கநல்லூரைச் சுற்றியுள்ள புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நீரில் மூழ்கிய நபரை காப்பாற்ற முயன்ற போது அடுத்தடுத்து மூழ்கியுள்ளனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.