அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை

பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போது குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டது. “சுவாமிநாதன்” என்று பெயர் சூட்டப்பட்டது. மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.

மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, “ஜெயமங்களதன்மகாளி” என்றழைக்கப்படுகிறாள். தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும்(ஜெயம்), மங்களமும் சாந்தமாகத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்காரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.

மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேசுவரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். இலிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை “தன்பாதம் தூக்கிய நடராஜர்” என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். மலையிலேயே வற்றாத குமார தீர்த்தம் இருக்கிறது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமி மலையை “கிரிவலம்” வருகிறார். குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், “குமரன் குன்றம்” என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.

திருவிழா:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

கோரிக்கைகள்:

திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், “ஐஸ்வர்ய முருகன்” என்றும் அழைக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

முருகன், சிவன், அம்பாளுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.