கொச்சி: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து 6வது சீசனின் லீக் ஆட்டம் ஒன்றில், கேரளாவை 6-3 என்ற கோல்கணக்கல் வீழ்த்தியது சென்னை அணி.
இத்தொடரில் சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. இந்நிலையில், கேரளாவும் சென்னையும் மோதும் ஆட்டம் கொச்சியில் நடைபெற்றது.
இதில், போட்டித் தொடங்கிய 39வது நிமிடத்தில் சென்னை அணி 1 கோல் அடித்தது. பின்னர் 45வது நிமிடத்திலும், ஸ்டாப்பேஜ் நேரத்திலும் சென்னை அணி அடுத்த 2 கோல்கள் அடிக்க, இடைவேளையின்போது 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது சென்னை அணி.
இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்தன. இரண்டாவது பாதியில் கேரள அணி வீறுகொண்டு 3 கோல்களை அடிக்க, சென்னை அணியும் சளைக்காது மேலும் 3 கோல்களை போட்டுத் தாக்கியது.
இறுதியில், ஆட்டம் 6-3 என்ற கணக்கில் முடிந்து, சென்னை அணி பெரிய வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் 21 புள்ளிகள் பெற்ற சென்னை அணி, 5வது இடத்திற்கு முன்னேறியது.