சென்னை:
ஆவடியில் தமிழக அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 3ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
தமிழக தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் மதுரையில் நடைபெற்ற வக்புவாரிய கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
அப்போது, சென்னை ஆவடியில் செப்டம்பர் 3ந் தேதி மாநில அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் பல நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களை கல்வித் தகுதிக் கேற்ப தேர்வு செய்யவுள்ளன.
பணியில் முன் அனுபவமில்லாதவர்களையும் நிறுவனங்கள் தேர்ந் தெடுக்கும். தேர்வானவர்களுக்கு முதலாண்டு குறைந்தபட்ச ஊதியத்துடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய மூன்றாண்டு பயிற்சிக்குப் பிறகு பணியில் திருப்தி ஏற்பட்டால், அந்த ஊழியர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணி நிரந்தரமாக்கப்படுவார். இல்லாவிடில் பயிற்சிக்குரிய சான்று வழங்கப்படும் என்றார்.
பயிற்சி சான்றுகளைப் பெற்றவர்கள் அதை வெளிநாட்டு பணி வாய்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சிறுபான்மையின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு பணிக்குச் செல்வதற்காக முதல்வரின் ஆலோசனைப்படி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்புத் திட்டங்களையும், அதற்கான பயிற்சிகளையும் மாணவ, மாணவியர் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.