சென்னை: பிஎச்டி எனப்படும் முனைவர் படிப்புகளுக்கு புதிய நடைமுறையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய நடைமுறை 2020-21ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆராய்ச்சி படிப்பின் தரத்தை மேம்படுத்துதல், வெளிப்படைத் தன்மையை கடைபிடித்தல் இந்த புதிய நடைமுறை அறிமுகப் படுத்தப்படுகிறது.
அதன்படி, பிஎச்டி மாணவா்கள் தங்களுடைய முதலாமாண்டு ஆராய்ச்சிக்கான முன் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முதுநிலை பட்ட மாணவா்களுடன் இணைந்து செய்யவேண்டும். இதுவரை பிஎச்டி மாணவா்கள் படிப்புக்கு இடையே 2 ஆண்டுகள் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இப்போதைய புதிய நடைமுறையின்படி, அது ஓராண்டாக குறைக்கப்பட்டு இருக்கிறது. பிஎச்டி மாணவா்கள் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடவேண்டும்.
மாணவர்களை போன்று, கைடு எனப்படும் ஆராய்ச்சி வழிகாட்டிகள், ஆய்வாளா் ஆகியோருக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள் குறைந்தது 5 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்க வேண்டும்.
அப்போது தான் அவர்கள் மாணவர்களுக்கு வழிநடத்துவதற்கான உரிய தகுதியை பெற்றவர்களாக கருதப்படுவர். இணைப் பேராசிரியா் குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உதவிப் பேராசிரியா் 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்க வேண்டும்.
நாம் நெறிமுறை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் உண்மையானவர்கள், ஆனால் இந்த செயல் முறையை வெளிப்படையானதாக மாற்றுவது அவசியம் என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
2013 ஆண்டு முதல் பிஎச்டி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இப்போது 1,200 பிஎச்டி மாணவர்கள் உள்ளனர்.