இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ம் தேதி விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து இன்று அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8 வரை சென்னை விமான நிலையம் குறிப்பிட்ட நேரங்களில் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னைக்கு வரும் விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நேர மாற்றம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள விமானப் பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமானப்படை நிறுவன தினமான அக்டோபர் 8ஐ ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்திய வான் பகுதியைக் காப்பதில் விமானப்படை பெற்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக அது இருக்கும்.
இந்த ஆண்டு ரபேல், தேஜஸ் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் என அனைத்து வகை போர் விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் இடம்பெறும், சாரங் மற்றும் சூரியகிரண் வான் சாகச குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
அரோக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூா், சூலூா், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த சாகச நிகழ்ச்சி சென்னையில் 2003ம் ஆண்டுக்குப் பிறகு 21 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது.
இந்திய விமானப் படையின் இந்த வான் சாகச நிகழ்ச்சியைக் காண சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர் கவனம் செலுத்திவருகின்றனர்..