சென்னை:

300 மீட்டர் விவகாரத்தால் சுமார் ரூ. 500 கோடி வீணாகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் வேளச்சேரி பகுதி மக்கள்.

வேளச்சேரி – பரங்கிமலை இடையே, 2007ம் வருடம் , 495 கோடி ரூபாய் செலவில், 4.5 கி.மீ., மேம்பால ரயில் பாதை பணி  ஆரம்பித்தது. இத்திட்டத்தில், 4 கி.மீ., பாதை பணி, 2014ம் வருடமே முடிந்துவிட்டது.

இந்த வழியில்  தில்லை கங்கா நகரில் இருந்து, பரங்கிமலை புறநகர் மின்சார நிலையம் வரை, 500 மீட்டர் துாரத்திற்கு, இடம் கையகப்படுத்துவதில்  தாமதம் ஏற்பட்டது. இதனால் இருப்புப்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

ப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கத்தில், ரயில் நிலையம் அமைக்கும் பணி மிக மெதுவாக நடந்துவருகிறது.

தில்லை கங்கா நகர், 36வது தெரு, முதல் தெரு மற்றும் ஜீவன்நகர் முதல்தெரு பகுதியில், 200 மீட்டர் துாரத்திற்கு, நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், மேம்பாலம் அமைக்க, மூன்று இடங்களில் சிமென்ட் கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி தொடர்கிறது.

மீதமுள்ள, 300 மீட்டர் துாரம் பாதை அமைக்கும் பகுதியில் உள்ள நில உரிமையாளர்கள், கூடுதலான இழப்பீடு தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதனால் இருப்புப்பாதை அமைக்கும் பணியில் தாமதம் தொடர்கிறது.

இது குறித்து, இப்பகுதி மக்கள், “ வேளச்சேரி – பரங்கிமலை இடையே, மேம்பால ரயில் பாதை பணி 2010ல் முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என, ரயில்வே துறை அறிவித்தது.

ஆனால் பணி துவங்கி, 10 வருடங்கள்  ஆகியும் இன்னும்  முடியவில்லை.  நில உரிமையாளர்கள் கோரும் இழப்பீடை வழங்கி, இடத்தை கையகப்படுத்தி பணியை முடிக்க வேண்டும்.  தென்னக ரயில்வே, மெத்தன போக்கை கைவிட வேண்டும்.

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் பாதை பணி முடிந்தால்,  , பரங்கிமலை நிலையத்திற்கு வரும் பயணிகள், தாம்பரம் செல்லவும், சென்னை எழும்பூர், சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையங்களுக்கும், பரங்கிமலையில் இருந்து, மெட்ரோ ரயிலில், விமான நிலையம் மற்றும் கோயம்பேட்டிற்கும் எளிதாக  சென்றடையலாம்.  300  மீட்டர் தூரத்தால் ரூ. 500 கோடி திட்டம் வீணாகிறது” என்கிறார்கள்.

மேலும், “இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும். தவிர மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதி மக்களாவது தப்பிக்கலாம்” என்கிறார்கள்.

ரயில்வே துறை இனியேனும் மெத்தனத்தை கைவிட்டு பணிகளை துரிதப்படுத்துமா?