செங்கண்ணூர் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள்
திருச்செங்குன்றூர் திவ்யதேசம், கேரளா. தற்போது ‘செங்கண்ணூர்’ என்று அழைக்கப்படுகிறது.
எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர் உள்ளது.
பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே 1.5 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் ‘தர்மர் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.
பாரதப் போரில் தர்மர் தமது குருவான த்ரோணாசாரியாரிடம், அவரது மகன் அசுவத்தாமா இறந்து விட்டதாகப் பொய் சொல்ல, அது துரோணருக்கு முடிவாகவும் அமைந்தது. தான் கூறிய பொய்யே ஆச்சாரியாரின் மரணத்திற்குக் காரணம் என்று வருந்திய தர்மபுத்ரர் இத்தலத்திற்கு வந்து பகவானுக்கு ஆலயம் எழுப்பி, திருச்சிற்றாற்றில் ஸ்நானம் செய்து பூஜை செய்தார். எனவே இப்பெயர் பெற்றது.
ஸ்தலப் பெருமை :-
நம்மாழ்வார் இந்த ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளார்.
ஸ்தலச் சிறப்பு :-
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 72வது திவ்ய தேசம்.
மூலவரின் விமானம் ஜெகஜோதி விமானம் எனப்படும்.
திருவிழா :-
வைகுண்ட ஏகாதசி, திருவோணம்
பிரார்த்தனை :-
தவறு செய்தவர்கள் வருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் :-
பெருமாள், தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தல்
சிறப்பம்சம் :-
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
மூலவர் :-
இமையவரப்பன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். இந்த மூர்த்தியைப் பாண்டவர் தர்மபுத்ரர் ஜீர்ணோத்தாரணம் செய்ததால் ‘தர்மர் பிரதிஷ்டை’ என்று அழைக்கப்படுகிறது.
ஒருசமயம் தேவர்கள் இத்தலத்தில் கூடி தவம் செய்தபோது, மகாவிஷ்ணு காட்சி தந்து ஒரு தந்தையைப் போல ஆசி கூறியதால் மூலவருக்கு ‘இமையவர் அப்பன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
சிவனுக்கு இத்தலத்தில் எம்பெருமான் தர்சனம் தந்துள்ளார்.